Monday, November 3, 2008

கவிதைகள் from http://vadakaraivelan.blogspot.com/


நடன ஒத்திகை

37, 38 எனக்
கடந்து கொண்டிருந்தது வயது
முந்தைய நாள்
பள்ளி ஆண்டு விழாவிற்கென
நடன ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த
பதினொன்றாவது படிக்கும் மகள்
காலையில் பள்ளிக்குப் போனதும்
வீட்டில் யாரும் இல்லை
அப்பாடலை ஒலிக்க விடுகிறாள்
தன் மகளைப் போலவே
உடலை அசைத்து அசைத்துச் சுழலுகிறாள்
அழைப்பு மணியை யாரோ அடிக்கும்
ஓசை கேட்டதும்
வெளியேறினாள் தன் 15 வயதிலிருந்து.
- நரன்
- உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.


வண்ணத்துப் பூச்சி

17 வருடம் கழித்துப் பார்த்தேன்
எதிர்த்திசையில்
அவள் மகளோடு போய்க் கொண்டிருந்தாள்
பார்த்துவிட்டு எதுவுமே பேசவில்லை
அந்தக் கணம்
அவள் முகத்திலிருந்து
வயதான வண்ணத்துப் பூச்சியொன்று
வெளியேறிப் பறந்து செல்கிறது
வேகவேகமாய் இறக்கைகளை அசைத்தபடி
சற்றே பதட்டமாய்.

- நரன்
- உயிர் எழுத்து அக்டோபர் 2008 இதழில்.


காத்துக் கிடந்த பக்கங்கள்

உன் மேஜை மேல்
புத்தகமொன்று விரிந்து கிடக்கிறது
காற்றின் கரங்கள்
புதுப் புதுப் பக்கங்களாய் என்னைக்
காட்டிக் கொண்டிருக்கிறது உனக்கு.
முழுதுமாய் நீ
வாசித்து விடுவாயென்ற வேட்கையில்
வேகவேகமாய்ப் புரண்டு படுக்கையில்
முடிவதற்கு முன்பாகவே
சட்டென்று மூடி விடுகிறாய் என்னை.
மீண்டும் உன் மேஜை மேல்
அந்தப் புத்தகம் காத்துக் கிடக்கிறது
மின் விசிறியைப் பார்த்தபடி
மிச்ச அதன் பக்கங்களோடு.

-எஸ்.நடராஜன்
- தீராநதி அக்டோபர் 2008 இதழில்.


அவள் விகடனில் சில சமயம் அத்தி பூத்தாற்போல நல்ல கவி்தை கிடக்கும்.

தூரத்து அப்பா

குல்பி ஐஸ்காரனைக் கண்டு
கையாட்டிச் சிரிக்கிறது
வேலைக்காரியுடன்
ஒளிந்து விளையாடுகிறது
பக்கத்து வீட்டு அங்கிள் தோள் மீது
இரு கை போட்டேறி
உரிமையோடு
கண்ணாடியை இழுக்கிறது.
வீதியில் செல்வோரெல்லாம்
அந்நியோன்யமாய்..
வருட விடுமுறையில் வரும்
பாவப்பட்ட
அப்பா மட்டும்
அந்நியமாய்.

-எம்.சுதா முத்துலட்சுமி
- அவள் விகடன் - 24 அக்டோபர் 2008

நன்றி

http://vadakaraivelan.blogspot.com/


No comments: